நிறைய நன்மைகள் கொண்ட நெருஞ்சில்


 நிறைய நன்மைகள் கொண்ட நெருஞ்சில் 

              


               நெருஞ்சில் தரையில் படர்ந்து வளரும் முட்செடி. மஞ்சள் நிறத்தில் பூக்கும் காய்களில் சிறிய முட்கள் காணப்படும். சிறுநெருஞ்சில், பெருநெருஞ்சில் என இரு வகை உண்டு. பெருநெருஞ்சில் காய்கள் பெரியதாக இருக்கும்.

                    சிறுநெருஞ்சில்தான் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குக் குளிர்ச்சியளிக்கக் கூடியது. சிறுநீரக நோய்கள், சிறுநீர்ப் பையில் உண்டாகும் நோய்த் தொற்று, சிறுநீர்ப் பாதைகளில் உண்டாகக்கூடிய அடைப்பு, நீர் எரிச்சல், சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு நெருஞ்சில் மிக முக்கியமான மருந்தாகிறது.

                      நெருஞ்சில், இனப்பெருக்கத்துக்கான ஹார்மோன்களை இயற்கையான முறையில் அதிகரிக்கச் செய்கிறது. இதில் உள்ள 'புரோட்டோடியோசின்' என்ற வேதிப்பொருள், ஆண்களில் 'டெஸ்டோசீடிரோன்' மற்றும் பெண்களில் 'ஈஸ்டிரோஜன்' இனப்பெருக்க ஹார்மோன்கள் அதிகம் சுரக்க உதவுகிறது. 

                        டெஸ்டோசீடிரோன் ஹார்மோன் உடல் தசைகளுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. பளு தூக்கும் வீரர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்காத வகையில் தசைகளின் வலிமையைக் கூட்ட நெருஞ்சில் விதை கொண்டு செய்யப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களும் நெருஞ்சில் விதையை தசைகளின் உறுதிக்குப் பயன்படுத்துகின்றனர்.

                          விந்தின் உற்பத்தியையும், அதன் ஆற்றலையும் அதிகரிக்கக்கூடிய சக்தி நெருஞ்சிலுக்கு உண்டு. பெண்களுக்கு கருமுட்டை தோன்ற உதவுகிறது. மாதவிடாய் முடிந்து 5-14 நாட்கள் நெருஞ்சில் சார்ந்த மருந்துகள் சாப்பிட, கருமுட்டை நல்ல முறையில் உருவாகும்.

                           'பாலிசிஸ்டிக் ஓவரா' எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்கள் வாரம் இருமுறை நெருஞ்சில் குடிநீர் பருக நீர் நன்கு வெளியேரும். சினைப்பையில் உண்டாகும் அழுத்தம் குறையும், ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

                            கல்லீரல் செயல்பாட்டை  மேம்படுத்தி, கெட்ட கொழுப்பு  மற்றும் உடலில் அதிகரித்த உப்புகளையும் குறைக்க நெருஞ்சில் உதவுகிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்களுக்கு நெருஞ்சில் குடிநீர் 100மி.லி. கொடுக்க, கெட்ட உப்புகள் நீங்கும். சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை உடைத்து வெளியேற்றும் திறன் நெருஞ்சிலுக்கு  உள்ளது.

                              ரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது நெருஞ்சில் குடிநீரை காலை, மாலை 100 மி.லி. குடிக்க ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வாரம் ஒருமுறை நெருஞ்சில் குடிநீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்புகள் வெளியேற்றப்படும். உடல் எடை குறைவதற்கு நெருஞ்சில் குடிநீர் 100 மி.லி. இருவேளை குடித்து வர,  கைத் தன்மையால் உடலில் சேர்ந்துள்ள நீர் வெளியேறும், நெருஞ்சிலானது நீரை பெருக்கும் தன்மை கொண்டது என்பதால், பத்து நாட்கள் சாப்பிட்டு பின் பத்து நாட்கள் இடைவெளி விட்டுச் 
சாப்பிடலாம்.

                         மூட்டு வலி,  கால் கட்டைவிரல் பகுதியில் தோன்றும் வலி,  வீக்கத்துக்கு நெருஞ்சில் குடிநீர் 100மி.லி. இருவேளை பருகலாம். நாள்பட்ட தோல் நோய்களால் அவதிப்படுவோருக்கு ரத்தத்தைச் சுத்தி செய்து தேவையற்ற உப்புகளை வெளியேற்ற இது பயன்படுத்தப்படுகிறது.

                            சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள், ஆண்மைச் சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள், பெண்களின் கருப்பை சம்பந்தமான மருந்துகள், வலி குறைவதற்கான மருந்துகளில் நெருஞ்சில் இடம்பெறுகிறது. 

                                                 
                              டாக்டர் இரா. பத்மப்ரியா 
                                     (சித்த மருத்துவர்) 

  

Comments

Post a Comment